October 3, 2022

பிஎம்-2.5 மாசு அதிகமாக காணப்படும் இடமாக தில்லி உள்ளது: கிரீன்பீஸ் ஆய்வறிக்கை

புது தில்லி, செப்.3

உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் அளவைவிட அதிக நுண்துகள்கள் அடங்கிய, மாசடைந்த காற்றையே 99 சதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சுவாசித்து வருவதாக கிரீன்பீஸ் இந்தியா ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் ஆண்டு சராசரி அளவைவிட 5 மடங்குக்கும் அதிகமான நுண்துகள்கள் காற்றில் கலந்துள்ளன. அத்தகைய மாசடைந்த காற்றைத்தான் நாட்டில் உள்ள 99 சதவீதத்துக்கும் அதிகமானோர் சுவாசித்து வருகின்றனர்.

நாட்டில் 56 சத மக்கள் காற்று மிகவும் அதிகமாக மாசடைந்துள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கர்ப்பிணிகளில் 62 சதம் பேரும் அப்பகுதிகளில் வசிக்கின்றனர். பிஎம்-2.5 மாசு அதிகமாகக் காணப்படும் இடமாக தில்லி உள்ளது. நாட்டில் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். காற்று மாசுபாடு குறித்த நிகழ்கால தரவுகளை மக்களுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது பின்பற்றப்பட்டு வரும் தேசிய காற்று தர நிர்ணய முறை போதுமானதாக இல்லை. அறிவியல் முறையில் அதைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும். தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். பிஎம்-2.5 நுண்துகள்களை சுவாசிப்பதால், அவை நுரையீரல், சுவாசப் பாதை உள்ளிட்ட பகுதிகளை ஊடுருவிச் சென்று சுவாசக் கோளாறுகள், இதயம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Spread the love