புது தில்லி, டிச.5
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம், அதன் பாலிசிதாரர்களுக்காக, முதன்முறையாக, வாட்ஸ் ஆப் வாயிலாகவும் சேவைகளை வழங்குவதாக தகவல்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: பாலிசிதாரர்கள், தங்களுடைய சின்ன சின்ன தேவைகளுக்காக எல்ஐசி நிறுவனம் அலுவலகத்தையோ அல்லது, முகவர்களையோ நாட வேண்டிய தேவை இன்றி, இனி எளிதாக, வாட்ஸ் ஆப் வாயிலாக இருந்த இடத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
எல்ஐசி இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொண்டுள்ள வாடிக்கையாளர்கள், இந்த வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து, பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த வாட்ஸ் ஆப் சேவையை பாலிசிதாரர்கள் பெறுவதற்கு, 89768 62090 எனும் மொபைல் எண்ணுக்கு ஹாய் எனும் குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். இதன் வாயிலாக பிரீமியம் நிலுவை, போனஸ் குறித்த தகவல்கள், பாலிசியின் தற்போதைய நிலை, கடன் சம்பந்தமான தகவல்கள் என பல்வேறு சேவைகளை உடனடியாகப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.