ஹைதராபாத், டிச.29
ஹைதராபாத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பயோலாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடெக்கிடம் 25 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிகபட்சமாக பயோலாஜிகல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 5 கோடி டோஸ்களும் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து பயோலாஜிகல் இ நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் விக்ரம் பரத்கர் தெரிவிக்கையில், நாங்கள் 30 கோடி கார்ப்வேக்ஸ் டோஸ்களைத் தயாரித்தோம். இவற்றில் 10 கோடி டோஸ்களை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசுக்கு வழங்கினோம். மீதம் 20 கோடி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. ஆர்டர் கிடைத்ததும் உடனே அனுப்பும் வகையில் அவை தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்தார். கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது. கரோனா தடுப்பூசிக்கான தேவை குறைந்த நிலையில், இந்நிறுவனம் இவ்வாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி தயாரிப்பை குறைத்தது. எனினும், இந்நிறுவனம் வசம் 5 கோடி டோஸ்கள் கையிருப்பாக உள்ளன. இவை 2023 முற்பகுதியில் காலாவதியாகின்றன. இதனால் நிறுவனத்துக்கு ரூ.220 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் கைவசம் உள்ள கொரோனா தடுப்பூசிகளை விரைவில் விநியோகம் செய்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது.