மதுரை, டிச.5
ராமேசுவரம்-மண்டபம் இடையேயான பாம்பன் ரயில் பாலம் கடந்த 1914ம் ஆண்டு கட்டப்பட்டது.
105 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. எனவே ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துரித ரெயில் போக்குவரத்துக்கு வசதியாக பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவது என்று தென்னக ரயில்வே முடிவு செய்தது.
அதன்படி பாம்பன் கடலுக்கு நடுவே ரூ.535 கோடி செலவில் 2.05 கி.மீ தொலைவுக்கு புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகளில் ரயில்வே கட்டுமான துறையின் துணை அமைப்பான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் மும்முரமாக இயங்கி வருகிறது. பாம்பன் கடலில் புதிய பாலம் அமைப்பதற்காக பல்வேறு சீதோஷ்ண சூழ்நிலை-சிரமங்களுக்கு நடுவே 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இதுவரை 76 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அடுத்தபடியாக கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கர்டர் தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. அங்கு கர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் கப்பல் செல்வதற்காக, இருபுறமும் உயரும் கிரேன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது?. புதிய பாம்பன் பாலப்பணிகள் வருகிற 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.