September 27, 2022

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த
இந்தியா-எகிப்து இடையே ஒப்பந்தம்

புது தில்லி, செப்.21

இந்தியா-எகிப்து இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், கூட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கவும் எகிப்து பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமது ஜாகியுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையயாப்பமிட்டார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றார். அங்கு எகிப்து பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமது ஜாகியை சந்தித்து, இருதரப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவை வலுப்படுத்தவும், கூட்டு ராணுவப் பயிற்சியை ஊக்குவிக்கவும், ராணுவ வீரர்களை பரிமாறிக் கொள்ளவும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

இதுதவிர உலகில் அமைதி, சமநிலை ஏற்பட இந்தியா, எகிப்தின் பங்களிப்பு, பிராந்திய பாதுகாப்பு குறித்து இரு அமைச்சர்களும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். கடந்த ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும், பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் மேற்கொண்ட செயல்பாடுகளுக்கு இருவரும் திருப்தி தெரிவித்தனர்.

மேலும், ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணத்தின்போது, இந்தியா-எகிப்து இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், கூட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கவும் ஒப்பந்தம் கையயாப்பமானது மிகப்பெரிய மைல்கல். இது அனைத்து நிலைகளிலும் பரஸ்பர புரிதலுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவிகரமாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இருதரப்பு உறவுக்கும் புதிய உத்வேகம் கிடைத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love