மும்பை, டிச.9
ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை அதிகரித்ததைத் தொடர்ந்து, வங்கிகளும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வங்கித்துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: ரெப்போ வட்டி விகித்தை 0.35 சதம் அதிகரிப்பதாக ஆர்பிஐ அண்மையில் அறிவித்தது. அதன் எதிரொலியாக, பாங்க் ஆஃப் இந்தியா, யஹச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகளும் தாங்கள் வழங்கியுள்ள கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன.
ரெப்போ அடிப்படையிலான கடன் விகிதம் திருத்தப்பட்ட ரெப்போ விகிதத்தின் (6.25 சதம்) படி 9.10 சதமாக உள்ளது. தனியார் துறை வங்கியான யஹச்டிஎஃப் நிதி அடிப்படையிலான கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அந்த வங்கி வழங்கும் பல நுகர்வோர் கடன்களுக்கான குறியீடாக இருக்கும் ஓர் ஆண்டு எம்சிஎல்ஆர் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50 சதம் அதிகரிக்கப்பட்டு 8.60 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எம்சிஎல்ஆர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த 1ம் தேதி முதல் உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி, ஆர்பிஐயின் ரெப்போ விகித திருத்தத்தைத் தொடர்ந்து, ஓராண்டுக்கான குறியீட்டு எம்சிஎல்ஆர் வட்டி விகித்தை 7.90 சதத்திலிருந்து 8.40 சதமாக அதிகரித்துள்ளது என்று வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.