December 9, 2022

பாங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் 71 சதம் அதிகரிப்பு

சென்னை, நவ.7

பாங்க் ஆஃப் இந்தியா கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2-வது காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கியின் செயல்பாட்டு வரம்புகளின் காரணமாக நிகரலாபம் 71 சதம் உயர்ந்து ரூ.960 கோடியாக உள்ளது.

இருப்பினும், ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது நிகர லாபம் ரூ.1051 கோடியிலிருந்து 8 சதம் குறைந்து ரூ.960 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல செயல்பாட்டு லாபம் 26 சதம் உயர்ந்து ரூ.3,374 கோடியாக உள்ளது. ஆண்டு அடிப்படையில் இது 55% வளர்ச்சியாகும். மேலும் சொத்து மீதான வருவாய், பங்கு மீதான வருவாய் முறையே 18 மற்றும் 321 அடிப்படை புள்ளிகளாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.04 சதத்திலிருந்து 49 அடிப்படை புள்ளிகள் வளர்ச்சி பெற்றுள்ளது. நிகர வட்டி வருவாய் ஆண்டுக்கணக்கில் 44 சதம் உயர்ந்து ரூ.5,083 கோடியாக உள்ளது. அட்வான்ஸ் மீதான வருவாய் 7.21 சதம் உயர்ந்துள்ளது. நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு வைப்புத் தொகை ஆண்டு அடிப்படையில் 4.05 சதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது மொத்த வைப்புத் தொகையில் 44.21 சதம் ஆகும்.

மேலும், வாராக் கடன்களை மீட்பதிலும் வங்கி பல படிகள் முன்னேறியுள்ளது. மொத்த வாராக்கடன் 8.51 சதமாகவும், நிகர வாராக்கடன் அளவு 1.92 சதமாகவும் இருக்கிறது. இவ்வாறு பாங்க் ஆப் இந்தியா செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love