November 29, 2022

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

மதுரை, அக்.28

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்கிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 1,432 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 66 லட்சத்து 11 ஆயிரத்து 660 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில், அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:

இன்றைய தினம் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்கிமங்கலம் ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இடத்திற்கான பட்டா ஆணைகள் என மொத்தம் 1,432 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 66 லட்சத்து 11 ஆயிரத்து 660 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை தரத்துடன் புதுப்பித்து அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதியோர் உதவித்தொகை பெற்று பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து தகுதியான பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இன்று நடைபெறும் இந்த விழாவில் மட்டும் 855 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், 370 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான இதுபோன்ற விழாக்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Spread the love