December 9, 2022

பணவீக்க குறைப்பு இலக்கை எட்ட தவறிவிட்டோம்: சக்தி காந்த் தாஸ்

மும்பை, நவ.3

பணவீக்கத்தைக் குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட தவறிவிட்டோம் என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் வட்டி விகித அதிகரிப்பு மூலம் பணவீக்க குறைப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டிருந்தால் அது பொருளாதாரத்தையும், மக்களையும் அதிகம் பாதிப்பதாக இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிக்கி-ஐபிஏ இணைந்து நடத்திய மாநாடு மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை எட்டுவதற்கு நாம் தவறிவிட்டோம் என்றார். அதே நேரத்தில் வட்டி விகித அதிகரிப்பு நடவடிக்கையை முன்கூட்டியே மேற்கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் வேறு வகையிலான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கும். மக்களும் பொருளாதாரரீதியாக பெரும் இன்னல்களை எதிர்கொண்டிருப்பார்கள். வட்டி விகிதத்தை மிகக்குறைவாக நீண்டகாலம் வைத்திருந்ததன் மூலம் நாட்டை பெரிய அளவிலான பொருளாதாரச் சீர்குலைவில் இருந்து காப்பாற்றியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கொரோனா காலகட்டத்தில் ஆர்பிஐ நெகிழ்வுத்தன்மையுள்ள நிதிக் கொள்கையைக் கடைப்பிடித்தது. அப்போது சற்று அதிகமாக இருந்த பணவீக்கத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

இப்போது நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுந்துவிட்டது. நிதி ஸ்திரத்தன்மையும் மேம்பட்டுள்ளது. ர´யா-உக்ரைன் போர் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்தது. இதுவும் எதிர்பார்த்த அளவுக்கு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம் என்று தெரிவித்தார்.

Spread the love