January 22, 2023

பட்ஜெட்டில் நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் இருக்காது: நிதியமைச்சர் உறுதி

புது தில்லி, ஜன.17

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் வரிவிதிப்புகள் இருக்காது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரை நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் எந்த புதிய வரியையும் விதித்தது இல்லை. நடுத்தர மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது. அது இனியும் தொடரும் என்றார். இதன் மூலம் நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் எதுவும் பட்ஜெட்டில் இருக்காது என்பதை அவர் தெரிவித்தார்.

மேலும், “100 பொலிவுரு நகரங்கலையும், 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை ஏற்படுத்தவும் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளி பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவை திறம்பட செயல்பட முடியும். மேலும், அரசின் நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. 2020-21ல் பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.31,820 கோடியாகும். இதுவே அடுத்த நிதியாண்டில் ரூ.66,539 கோடியாக அதிகரித்தது. கொரோனா தொற்று பிரச்னைக்கு நடுவில் இந்த வளர்ச்சி ஏற்பட்டது கூடுதல் சிறப்பம்சமாகும். வங்கிகளின் வாராக் கடன் அளவும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது என்றார்.

Spread the love