December 8, 2022

பசுமை பத்திரங்கள் வெளியீட்டின் வாயிலாக ரூ.16 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்

புது தில்லி, நவ.10

மத்திய நிதியமைச்சகம், உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப, பசுமை பத்திரங்களை வெளியிடுவதற்கான அடிப்படை பணிகளை நிறைவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, நிதியமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவத்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில், பசுமை பத்திரங்கள் வெளியீட்டின் வாயிலாக, ரூ.16 ஆயிரம் கோடி நிதியை திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

இது, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், நிதி திரட்டும் திட்டத்தில் ஒரு பகுதியாகும். மேலும், பத்திரங்கள் வெளியீட்டுக்கான அடிப்படை பணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், விரைவில் அனுமதி பெறப்பட்டுவிடும். இவை, பசுமை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான, நீண்டகால பத்திரங்களாகும்.

மேலும், மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் உரையின் போது, பசுமை உள்கட்டமைப்புகளுக்காக, பசுமை பத்திரங்கள் வெளியிடப்பட்டு, நிதி திரட்டப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தற்போது பசுமை பத்திர வெளியீட்டுக்கான கட்டமைப்பு பணிகள் முடிவு பெற்றுள்ளன. பசுமை பத்திரங்கள் வாயிலாகத் திரட்டப்படும் நிதி, பொதுத்துறை திட்டங்களில் பயன்படுத்தப்படும். மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், அக்டோபரில் மார்ச் காலகட்டத்தில், மொத்தம் ரூ.5.92 லட்சம் கோடியை, சந்தையில் கடனாக பெற திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love