September 27, 2022

பங்கு வெளியீடு மூலம் ரூ.740 கோடி திரட்ட ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி நிறுவனம் திட்டம்

புது தில்லி, பிப்.9

ஐநாக்ஸ் விண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐஜிஇஎஸ்எல் எனும், ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக ரூ.740 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 7ம் தேதியன்று செபிக்கு விண்ணப்பித்து இருப்பதாக, மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பங்கு வெளியீட்டின்போது, ரூ.370 கோடிக்கு புதிய பங்குகளையும்; ரூ.370 கோடி மதிப்பிலான நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.

மேலும், பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதி, விரிவாக்கப் பணிகளுக்கும், பொதுவான நிர்வாக தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. மேலும் ரூ.140 கோடி கடனை அடைக்க பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love