December 9, 2022

நூல் விலை கிலோவுக்கு ரூ.20 சரிவு
ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர், நவ.11

திருப்பூரில் அதிகளவில் பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள்.

நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அடிக்கடி நூல் விலை அதிகரித்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். தற்போது நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்திருந்தது. கடந்த மாதம் 40 ரூபாய் குறைந்த நிலையில் நடப்பு மாதத்திலும் 20 ரூபாய் குறைந்துள்ளது தொழில் துறையினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.273-க்கும், 24-ம் நம்பர் ரூ.285-க்கும், 30-ம் நம்பர் ரூ.295-க்கும், 34-ம் நம்பர் ரூ.315-க்கும், 40-ம் நம்பர் ரூ.335-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.265-க்கும், 24-ம் நம்பர் ரூ. 275-க்கும், 30-ம் நம்பர் ரூ.285-க்கும், 34-ம் நம்பர் ரூ. 305-க்கும், 40-ம் நம்பர் ரூ.325-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love