September 27, 2022

நில குத்தகை கொள்கை மூலம் ரூ.30,000 கோடி கூடுதல் வருவாய் திரட்டுவதற்கு ரயில்வே இலக்கு

புது தில்லி, செப்.10

மத்திய அரசு கதி சக்தி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. நாட்டின் போக்குவரத்து கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து இத்திட்டத்தின் கீழ் ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 300 சரக்கு முனையங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கதி சக்தி திட்டத்தின் கீழ் சரக்கு முனையங்கள் அமைப்பதற்கு இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், சரக்கு முனைய உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே நில குத்தகை கொள்கைகளில் மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. அதாவது, குத்தகை கால அளவை 35 ஆண்டுகளாக உயர்த்த சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், நிலத்தின் உரிமத் தொகையை 6 சதத்திலிருந்து 1.5 சதமாகக் குறைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், இந்த மாற்றங்களால், புதிய முதலீடுகள் பெருகும் என்றும் சரக்கு முனையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் புதிய கொள்கை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.30,000 கோடி திரட்ட ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

Spread the love