February 3, 2023

நான்கு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை
எல்ஐசியுடன் இணைக்கலாம்: வல்லுநர்கள் யோசனை

புது தில்லி, டிச.9

கலவை காப்பீட்டு நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு முன்வந்துள்ள நிலையில், பொதுத்துறையை சேர்ந்த நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்களையும், எல்ஐசி நிறுவனத்துடன் இணைக்கலாம் என, துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விரிவான செய்தியாவது: காப்பீட்டுச் சட்டம் 1938 மற்றும் ‘காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் 1999’ ஆகியவற்றின் பல்வேறு விதிகளைத் திருத்துவதற்கு மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு காப்பீட்டு நிறுவனமே, ஆயுள் காப்பீடு மற்றும் பொது காப்பீடு பாலிசிகள் இரண்டையுமே சேர்த்து விற்பனை செய்யலாம். அந்த வகையில், நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களையும், ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., உடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, பொதுத்துறையை சேர்ந்த ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேசனல் இன்சூரன்ஸ், நியு இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ்’ ஆகிய நான்கு நிறுவன ஊழியர்களும், இந்த நான்கு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்களையும், எல்ஐசியுடன் இணைப்பது நல்ல யோசனையாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Spread the love