October 4, 2022

நாட்டில் 33 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு
மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

புது தில்லி, பிப்.10

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 33 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், கடந்த மாதத்தில் மட்டும் 1,385-க்கும் அதிகமான மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் தொண்டை அலர்ஜி, சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 33-க்கும் மேற்பட்ட மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.inஎன்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Spread the love