September 27, 2022

நாட்டில் வேலையின்மை 6.8 சதமாக உள்ளது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்

புது தில்லி, செப்.22

நாட்டில் தற்போது வேலையின்மை 6.8 சதமாக உள்ளது என ஆய்வுத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஏராளமானோர் வேலைவாய்ப்பு இன்றி இருப்பதாக பலரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் வேலையின்மை குறித்த புள்ளி விவரங்களை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற தனியார் அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் வேலையின்மை 6.8 சதமாக உள்ளது. கிராமப்புறங்களில் 6.4 சதமாகவும், நகர்ப்புறங்களில் 7.9 சதமாகவும் இது உள்ளது.

அதோடு, ஆகஸ்ட் மாத நிலவரப்படி, மாநில வாரியாகவும் வேலையின்மை குறித்த புள்ளி விவரங்களை அந்த மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை 6 சதமாகவும், பிஹாரில் 12.8 சதமாகவும், டெல்லியில் 8.2 சதமாகவும், குஜராத்தில் 2.6 சதமாகவும் வேலைவாய்ப்பின்மை உள்ளது. கேரளாவில் 6.1 சதமாக உள்ள வேலைவாய்ப்பின்மை, கர்நாடகாவில் 3.5 சதமாகவும், தெலங்கானாவில் 6.9 சதமாகவும், தமிழ்நாட்டில் 7.2 சதமாகவும் உள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும், உத்தரப் பிரதேசத்தில் 3.9 சதமாகவும், மேற்கு வங்கத்தில் 7.4 சதமாகவும், ஜம்மு காஷ்மீரில் 32.8 சதமாகவும், ஜார்க்கண்ட்டில் 17.3 சதமாகவும், ராஜஸ்தானில் 31.4 சதமாகவும் உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியாணாவில் 37.3 சதமாக உள்ள வேலைவாய்ப்பின்மை, குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் 0.4 சதமாக உள்ளது என்று அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. முன்னதாக, மாதாந்திர அடிப்படையிலான வேலையின்மை விகிதத்தின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டில் வேலையின்மை 8.28 சதமாக இருந்தது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் ஆய்வுத் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love