November 29, 2022

நாட்டில் முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை
வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொடும்: அனாரோக்

மும்பை, அக்.27

வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் விகிதங்கள் அதிகரித்த நிலையிலும், சொந்த குடியிருப்புகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அனாரோக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு நீடித்தால் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை இந்த ஆண்டு 3.6 லட்சத்தைத் தொடக்கூடும். இது, இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனையாகும். இதற்கு முன்னர் கடந்த 2014-ல் சென்னை, டெல்லி-என்சிஆர், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆர்), கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே ஆகிய ஏழு முக்கிய நகரங்களில் (புதிய விற்பனை மட்டும்) 3,42,980 வீடுகள் விற்பனையானதுதான் இதுவரை அதிகபட்சமாக இருந்து வருகிறது. ஏற்கெனவே, கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வீடுகளின் விற்பனை 2,72,710-ஐ எட்டியுள்ளது. இதன் மூலம், கடந்த 2019ம் ஆண்டில் கொரோனா நெருக்கடிக்கு முந்தைய அதே காலகட்டத்திய விற்பனையான 2,61,360-ஐ நடப்பாண்டு விற்பனை விஞ்சியுள்ளது.

மேலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் 6.5 சதத்தில் இருந்து சுமார் 8.5 சதமாக அதிகரித்துள்ள போதிலும், இந்த பண்டிகை மாதத்தில் வீட்டுத் தேவை தொடா்ந்து வலுவாக இருப்பதால், 2022 முடிவுக்குள் 7 நகரங்களிலும் ஒட்டுமொத்த வீடுகள் விற்பனை 3.6 லட்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love