December 9, 2022

நாட்டில் தங்கத்தின் தேவை 14 சதம் அதிகரிப்பு: உலக தங்க கவுன்சில் அறிக்கை

புது தில்லி, நவ.2

நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் தங்கத்தின் தேவை 14 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகில் தங்கத்தின் தேவை தொடர்பான அறிக்கையை உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2021-2022-ம் நிதியாண்டின் 2வது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) இந்தியாவில் தங்கத்தின் தேவை 168 டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 14 சதம் அதிகரித்து 191.7 டன்னாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டுடன் இதை ரூபாய் மதிப்பில் ஒப்பிடும்போது இது 19 சதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டில் இதன் மதிப்பு ரூ.71,630 கோடியாக இருந்தது. தற்போது இது 19 சதம் அதிகரித்து ரூ.85,010 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து உலக தங்க கவுன்சில் பிராந்திய தலைமைச் செயல் அதிகாரி பி.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்துள்ளதாவது:

2022ம் ஆண்டின் 2ம் காலாண்டில் 191.7 டன்னாக உள்ள இந்தியாவின் மொத்த தங்கத் தேவை கடந்தஆண்டை விட 14 சதம் அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட சிறந்த செயல்திறன், வலுவான நுகர்வோர் ஆர்வம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் தங்கத்தின் தேவை இருந்ததைப் போல் தற்போதைய நிலை உள்ளது. அதேபோல் 2-ம் காலாண்டில் நாட்டில் தங்க நகைகளின் தேவை 17 சதம் அதிகரித்து 146.2 டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இது 125.1 டன்னாக இருந்தது. 2ம் காலாண்டு முடிவில் வங்கிக் கடன் வளர்ச்சி ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது, கடன் விரிவாக்கம் ஆகியவை இந்த தேவைக்கு உத்வேகத்தைச் சேர்த்துள்ளது. தீபாவளிப் பண்டிகை, 4ம் காலாண்டில் நடைபெறவுள்ள திருமண வைபவங்களால் தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்கும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டுக்கான தங்கத்தின் தேவை 750 முதல் 800 டன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love