December 8, 2022

நாட்டில் சிறுகடன் துறை 16 மடங்கு வளர்ச்சி எம்எஃப்ஐஎன் ஆய்வறிக்கை

புது தில்லி, நவ.19

நாட்டில் சிறுகடன் துறை, கடந்த 10 ஆண்டுகளில 16 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து மைக்ரேஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூசன்ஸ் நெட்வொர்க் (எம்எஃப்ஐன்) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மார்ச் மாத நிலவரப்படி அந்தத் துறையின் மதிப்பு ரூ.2,85,441 கோடியாக உள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.17,264 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தத் துறை 16.5 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது.

மேலும், இந்தத் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக எம்எஃப்ஐஎன் அமைப்பு கடந்த 2010-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் செயல்பாடு காரணமாக சிறுகடன் துறை அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போது இந்தத் துறையில் 6 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 2022 மார்ச் மாத நிலவரப்படி, அவர்களுக்கு சுமார் 202 நிறுவனங்கள் சிறுகடன் சேவைகளை அளித்து வருகின்றன. சிறுகடன் துறையில் வங்கிகள்தான் அதிக பங்கு வகிக்கின்றன. மொத்தம் வழங்கப்பட்டுள்ள சிறுகடன்களில் வங்கிகளின் பங்கு ரூ.1,14,051 கோடியாகும். இது, ஒட்டுமொத்த சிறுகடன் நிலுவையில் 40 சதமாகும். வங்கிகளுக்கு அடுத்தபடியாக, வங்கியல்லாத சிறுகடன் நிறுவனங்கள் ரூ.1,00,407 கோடிக்கு சிறுகடன்களை வழங்கியுள்ளன. இது, ஒட்டுமொத்த சந்தையில் 35.2 சதம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக குறு வங்கிகள் ரூ.48,314 கோடிக்கு (16.9 சதம்) சிறு கடன் வழங்கியுள்ளன. வங்கியல்லாத நிறுவனங்கள் 6.9 சதமும் சிறுகடன் நிறுவனங்கள் 1 சதமும் சந்தையில் பங்கு வகிக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love