December 9, 2022

நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் தயாரிப்பு துறை செயல்பாடுகள் அதிகரிப்பு

புது தில்லி, நவ.2

நாட்டின் தயாரிப்புத் துறை செயல்பாடுகள், கடந்த அக்டோபரில் அதிகரித்து, தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எஸ் & பி குளோபல் இந்தியா எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின், அக்டோபர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பிஎம்ஐ குறியீடு, 55.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, செப்டம்பர் மாதத்தில் 55.1 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். அக்டோபர் மாதத்தில், இக்குறியீடு, 55.3 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் வாயிலாக, வலுவான முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது. கடந்த 16 மாதங்களாக தயாரிப்பு துறை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. நிறுவனங்கள் அக்டோபரில் கூடுதல் வேலையை பெற்றுள்ளன. இந்திய உற்பத்தியாளர்கள், வணிகம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love