புது தில்லி, டிச.5
ஹிஸாரில் உள்ள ஓம் ஸ்டர்லிங் க்ளோபல் பல்கலைக்கழகத்தில், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் சமூதாய வானொலி நிலையம் 90.0 பவ்யாவாணியை மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தொடங்கி வைத்தார்.
இளைஞர்கள், திறமை மிக்கவர்களாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாக, வலிமையான பிணைப்பைப் கொண்டிருப்பவர்களாக இருப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி என்ஜினாகத் திகழ்கின்றனர் என்றார். இதன்மூலம், உலகின் வளர்ச்சி என்ஜினாக இந்தியா விளங்க வித்திடுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
பன்முக அணுகுமுறை மூலம் முழுமையான கற்றல் அனுபவத்தை மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை வழங்கும் எனக் குறிப்பிட்ட அவர், கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்வதாகவும் கூறினார். இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய ஸ்டாட்-அப் நிறுவனங்களைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது என்றார். தொடர்ந்து, அங்குள்ள ஓம் ஸ்டெர்லிங் க்ளோபல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அனுராக் சிங் தாகூர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, உரையாற்றினார்.
அப்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், இளைஞர்கள், ஃபிட் இந்தியா இயக்கத்தில், துடிப்புடன் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமைவகிக்கும் நிகழ்ச்சியில், இளைஞர் மாநாடும் நடத்தப்படும் என்றார். நாடு முழுவதும் இளைஞர்களை முன்னிறுத்தும், 750 இளைஞர் உரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என குறிப்பிட்டார்.