September 27, 2022

நாட்டின் மொத்த விலை பணவீக்கம்
கடந்த ஆகஸ்டில் 12.41 சதம் சரிவு

புது தில்லி, செப்.15

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த ஜூலையை விட தொடர்ந்து 3வது மாதமாக 12.41 சதமாக சரிந்துள்ளளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான நாட்டின் மொத்த விலை பணவீக்கம் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கம் 12.41 சதமாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்தில் இது 13.93 சதமாக இருந்தது. 2021ம் ஆண்டு, ஆகஸ்டில் இது 11.64 சதமாக இருந்தது. கடந்த ஆகஸ்ட்டின் மொத்த விலை பணவீக்கம் உயர்வுக்கு, உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், எரிவாயு, ரசாயனம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக உள்ளது.

ஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கம் குறைந்தாலும் கூட, தொடர்ந்து 17 மாதங்களாக மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.88 சதமாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. மேலும், அடுத்த சில மாதங்களுக்கு பணவீக்கம் உயர்வாகவே இருக்கும் என கருதப்படுவதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தும் என தெரிகிறது.

Spread the love