October 4, 2022

நாட்டின் முக்கிய நகரங்களின் ரியல் எஸ்டேட் சந்தையில் 5 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன: அனராக்

புது தில்லி, செப்.6

இந்திய வங்கிகள் தடைப்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள் நீண்ட காலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாராக் கடனாக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ரியல் எஸ்டேட் மீதான கடன் வர்த்தகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது, ஏனெனில் தொற்றுநோய்க்கு பிந்தைய பொருளாதாரச் சூழ்நிலையில் வணிக மற்றும் குடியிருப்பு தேவை அதிகரித்துள்ளதால் இத்துறையில் நிதி தேவை அதிகமாக உள்ளது.

இருப்பினும், இத்துறையில் வங்கிகளுக்கான முக்கியக் கவலை என்னவென்றால், முடங்கிய ரியல் எஸ்டேட் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் கடன்கள் மோசமானதாக மாறினால் பணத்தைத் திரும்பப் பெற முடியாத வகையில் வாராக் கடனாக மாறும் என்பது தான்.

இந்நிலையில், ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனராக் நிறுவனத்தின் ஆய்வின்படி, நாட்டின் ஏழு முக்கிய மெட்ரோ நகரங்களின் ரியல் எஸ்டேட் சந்தையில் சுமார் 4.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500,000 வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. என்சிஆர் மற்றும் மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆர்) ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டும் தேங்கிக் கிடக்கும் இத்தகைய திட்டங்களின் அளவு சுமார் 77 சதமாக உள்ளது. இதேபோல் தாமதமான அல்லது முடங்கிக் கிடக்கும் திட்டங்களில் புனே 9 சதத்தையும், கொல்கத்தா 5 சதத்தையும் கொண்டுள்ளது. பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய தெற்கு பெருநகரங்கள் மீதமுள்ள 9 சத பங்கைக் கொண்டுள்ளன.

Spread the love