புது தில்லி, டிச.7
நாட்டின் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கணிப்பை 6.9 சதமாக உலக வங்கி உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த அக்டோபர் மாதம் இந்த அமைப்பு வெளியிட்ட வளர்ச்சி கணிப்பில் முந்தைய கணிப்பான 7.5 சதத்திலிருந்து 6.5 சதமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உலக நிகழ்வுகளின் தாக்கங்களை இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் தன்மை, அடுத்தடுத்த காலாண்டுகளின் வளர்ச்சி உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு, பொருளாதார வளர்ச்ச்சிக்கான கணிப்பை 6.5 சதத்திலிருந்து 6.9 சதமாக அதிகரித்துள்ளது.
உலகில் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், சர்வதேச அமைப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு உயர்த்தி வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
மேலும், இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மோசமடைந்து வரும் சர்வதேச சூழல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், மற்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. சர்வசேத பணக்கொள்கை, குறைந்து வரும் உலகின் பொருளாதார வளர்ச்சி, விலையேற்றம் உள்ளிட்டவற்றின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி முந்தைய 2021-2022 நிதியாண்டை காட்டிலும் நிகழாண்டு குறைவாகவே இருக்கும். இருப்பினும், உள்நாட்டு தேவையின் காரணமாக வலுவான வளர்ச்சியை இந்தியா எட்டுவதுடன், வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழும் என தெரிவித்துள்ளது.