October 4, 2022

நாட்டின் பணவீக்கம் மெதுவாக குறைகிறது- ஆர்பிஐ ஆளுநர் நம்பிக்கை

புது தில்லி, செப்.5

நாட்டின் பணவீக்கம் மெதுவாக குறைந்து வருவதாக, ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதத்தில், பணவீக்கம் 7.8 சதமாக அதிகரித்த நிலையில், தற்போது, மெதுவாக குறைந்து வருகிறது. கச்சா எண்ணெய், பொருட்கள், உணவு ஆகியவற்றின் விலை குறைந்ததை தொடர்ந்து, பணவீக்கமும் குறையத் துவங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில், பணவீக்கம் 5 சதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பணவீக்கத்தை குறைக்க, ஆர்பிஐ சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளை ஆர்பிஐ ஆராய்ந்து வருகிறது. எங்கு முரண்பாடு அதிகம் இருக்கிறதோ, அது கண்டறியப்பட்டு, அடுத்து வரும் பணக் கொள்கை கூட்டத்தில் சரிசெய்யப்படும். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தான், முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், முன் எப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டாலும், இந்திய பொருளாதாரம் மிகவும் நெகிழ்வு தன்மையுடன் உள்ளது. உலகளாவிய வினியோகங்களில் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியா அந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. இந் நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். இந்தியாவின் வளர்ச்சி குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love