மும்பை, டிச.30
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதமாக அதிகரித்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.2 சதமாக இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்ததால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக, ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிக்கும்போது, வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரிக்கும். இதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. மேலும் ஆர்பிஐ தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரண்டாவது காலாண்டில், நடப்புக் கணக்கு பற்றாக்குறை ரூ.2.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் பற்றாக்குறை ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது.
முதல் காலாண்டில், வணிக வர்த்தக பற்றாக்குறை ரூ.5.17 லட்சம் கோடியாக இருந்தது, இரண்டாவது காலாண்டில் ரூ.6.85 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதம், ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதமாக சரிந்துள்ளது. மேலும் வங்கிகள் அமைப்பு நல்ல மூலதனத்துடன் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.