October 4, 2022

நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஜிடிபியில் 3 சதத்திற்குள் இருக்கும்: ஆர்பிஐ

புது தில்லி, செப்.19

இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளை விட இறக்குமதி செய்யும் அளவானது ஜிடிபியில் 3 சத பற்றாக்குறைக்குள் இருக்கும் என ஆர்பிஐ எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஒரு நாட்டின் வர்த்தக மதிப்பை அளவிடும் முறையாக நடப்பு கணக்கு பற்றாக்குறை பயன்படுத்தப்படுகிறது. ஏற்றுமதியை விட இறக்குமதி மதிப்பு அதிகமாக இருப்பதை இவ்வாறு குறிப்பிடுவர். இந்நிலையில் ஆர்பிஐ செப்டம்பர் மாத செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதத்திற்குள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்திருப்பது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்வது, உலகளாவிய அளவில் எரிபொருள், உணவு மற்றும் உரங்களின் விலைகள் குறைந்திருப்பதால் பற்றாக்குறையை சமாளிக்கக் கூடிய அளவு உள்ளது என்கின்றனர்.

மேலும், விலைவாசியை பொறுத்தவரை ஏற்றத்திலேயே உள்ளது என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன் விளைவுகளை கட்டுப்படுத்தவும், பணவீக்க எதிர்பார்ப்புகளை உறுதியாக நிலைநிறுத்தவும் நிதிக் கொள்கை அவசியம் என தெரிவித்துள்ளது. குறைந்த கால அளவில் பணவீக்கம் ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என ஆர்பிஐ எதிர்பார்க்கிறது. அக்டோபரிலிருந்து இது மிதமானதாக மாற வேண்டும். 2023 ஜனவரி – மார்ச் காலாண்டில் ஆர்பிஐயின் ஏற்றுக்கொள்ளக் கூடிய பணவீக்க அளவான 2 – 6 சதத்திற்குள் செல்ல வேண்டும். ஆர்பிஐ வட்டி விகிதத்தை இதுவரை 1.4% அதிகரித்துள்ளது. அடுத்த வட்டி விகித மதிப்பாய்வை செப்டம்பர் 30 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது.

Spread the love