September 27, 2022

நாட்டின் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த ஜூலையில் 2.4 சதமாக சரிவு

புது தில்லி, செப்.13

நாட்டின் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி ஜூலை மாதத்தில் நான்கு மாதங்களில் இல்லாத அளவு 2.4 சதமாக சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நாட்டின் தொழிற்துறை உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் 2.4 சதமாக உள்ளது.
இதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 2.2 சதம் இருந்ததுதான் மிகவும் குறைந்தபட்சமாக இருந்தது. தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.7 சதமாகவும் மே மாதத்தில் 19.6 சதமாகவும் இருந்தது. ஜூன் மாதத்தில் அது 12.7 சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொழிற்சாலை உற்பத்தி, தொழிற்துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐஐபி) கடந்த ஆண்டு ஜூலை 2021 மாதத்தில் 11.5 சதமாக வளர்ச்சியடைந்தது. அது, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 3.2 சதம் வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் மின்சாரத் துறை உற்பத்தி வளர்ச்சி 2.3 சதமாக உள்ளது. அது, கடந்த ஆண்டின் அதே மாதத்தில் 11.1 சதமாக இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில் சுரங்கத் துறை உற்பத்தி வளர்ச்சி 3.3 சதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐஐபி 10 சதம் உயர்ந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 33.9 சதமாக இருந்தது.

புதிய முதலீடுகள் தொடர்பான நிலவரத்தைப் பிரதிபலிக்கும் மூலதனப் பொருள்களின் உற்பத்தி, கடந்த ஜூலையில் 5.8 சதம் உயர்ந்தது. மேலும், நுகர்வோர் பொருள்கள் பிரிவில் உற்பத்தி கடந்த ஆண்டு ஜூலையில் 19.4 சதமாக இருந்தது. அது, இந்த முறை வெறும் 2.4 சதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. ஐஐபி-யில் சுமார் 34 சதம் பங்கு வகிக்கும் முதன்மைப் பொருட்கள் பிரிவில், ஜூலை மாத உற்பத்தி 2.5 சதம் வளர்ச்சியடைந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 12.4 சதமாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love