September 27, 2022

நாட்டின் ஏற்றுமதி, 28.51 சதம் உயர்வு
மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்

புது தில்லி, பிப்.10

நாட்டின் ஏற்றுமதி, இம்மாதத்தின் முதல் வாரத்தில் 28.51 சதம் உயர்ந்திருப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வர்த்தக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு மாதம் 1ம் தேதியிலிருந்து, 7ம் தேதி வரையிலான முதல் வாரத்தில், நாட்டின் ஏற்றுமதி 28.51 சதம் அதிகரித்து, ரூ.65 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. மேலும், நடப்பு ஆண்டின் வாராந்திர சராசரி ஏற்றுமதி ரூ.52,500 கோடி. பிப்ரவரி முதல் வாரத்தில், சராசரியை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏற்றுமதி இந்த அளவுக்கு அதிகரித்து உள்ளதற்கு காரணம், பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலியம் ஆகிய துறைகளில் ஏற்றுமதி அதிகரித்ததாகும்.கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி 23.69 சதம் அதிகரித்து, ரூ.2.55 லட்சம் கோடியாக அதிகரித்திருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், நாட்டின் ஏற்றுமதி 46.53 சதம் அதிகரித்து, ரூ.25.15 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Spread the love