December 9, 2022

நவ.18ம் முதல் தனியார் ராக்கெட்
விண்ணில் ஏவப்படுகிறது: இஸ்ரோ

சென்னை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற நவ.18ந் தேதி விண்ணில் ஏவுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் விக்ரம்-எஸ் என்ற ராக்கெட் ஏவும் பணிக்கு மிசன் பிரரம்ப் என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். மேலும், இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக ஏவப்படவில்லை.

வருகிற 18ந் தேதி வானிலை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட், வெளிநாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 480 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு அவை பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Spread the love