December 9, 2022

நவ.10ல் கெய்ன்ஸ் டெக்னாலஜி ஐ.பிஓ வெளியீடு

புது தில்லி, நவ.8

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா’ நிறுவனத்தின் ஐபிஓ எனும் புதிய பங்கு வெளியீடு, 10ம் தேதியன்று துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 10ம் தேதியன்று துவங்கி, 14ம் தேதியுடன் முடிவடையவுள்ளதாக உள்ளது.

மேலும், துணிகர முதலீட்டாளர்களுக்கு, 9ம் தேதியன்று துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. துவக்கத்தில், புதிய பங்கு விற்பனையின் வாயிலாக, ரூ.650 கோடியை திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அதை ரூ.530 கோடியாக குறைத்துக் கொண்டுள்ளது. அத்துடன், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 55.85 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.

புதிய பங்குகள் விற்பனையின் வாயிலாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு, கடனை திருப்பி அடைக்கவும், நடைமுறை மூலதன செலவுகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மைசூரை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனத்துக்கு, தமிழகம் உள்ளிட்ட எட்டு இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love