January 25, 2023

நவம்பர் வரை அரசின் நிதிப்பற்றாக்குறை
59 சதம் இலக்கை அடைந்தது : நிதியமைச்சகம்

புது தில்லி, டிச.31

கடந்த நவம்பர் வரையில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 59 சதத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசின் வருவாய்க்கும் செலவினத்துக்கும் உள்ள இடைவெளியே நிதிப் பற்றாக்குறை. அப்பற்றாக்குறையைக் கடன்களைப் பெற்று மத்திய அரசு ஈடுசெய்து வருகிறது. நடப்பு 2022-23ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.16.61 லட்சம் கோடியாக இருக்கும் என நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.4 சதம் ஆகும்.

கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.9.78 லட்சம் கோடியாக உள்ளதென மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மூலதன செலவினம் அதிகரித்ததோடு வரி அல்லாத வருவாய் குறைந்துள்ளது. அதன் காரணமாகவே நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கு கட்டுப்பாட்டு இயக்குநரக (சிஜிஏ) தரவின்படி, நடப்பு நிதியாண்டின் நவம்பர் வரை நிகர வரி வருவாய் ரூ.12.24 லட்சம் கோடியாக உள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 63.3 சதம் ஆகும். கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர வரி வருவாய் 73.5 சதமாக இருந்தது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை வரி அல்லாத வருவாய் ரூ.1.98 லட்சம் கோடியாக (73.5 சதம்) உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 91.8 சதமாக இருந்தது. கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரை மத்திய அரசின் மொத்த செலவினம் 59.6 சதமாக இருந்தது. நடப்பாண்டின் இதே காலகட்டத்தில் செலவினம் 61.9 சதமாக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் அரசின் மூலதன செலவினம் 49.4 சதத்தில் இருந்து 59.6 சதமாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் மொத்த வருவாய் நவம்பர் வரை ரூ.14.64 லட்சம் கோடியாக (64 சதம்) உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வருவாய் 69.8 சதமாக இருந்தது. வரும் மாதங்களில் அரசின் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்பதால், நிதிப் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட 6.4 சத இலக்கை விட அதிகரிக்காது என்றே பொருளாதார நிபுணார்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Spread the love