January 22, 2023

நவம்பரில் நாட்டின் உற்பத்தி நடவடிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது: எஸ் & பி குளோபல்

புது தில்லி, டிச.9

வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இந்தியப் பொருள்களுக்கான தேவை அதிகரித்ததால் கடந்த நவம்பரில் நாட்டின் உற்பத்தி நடவடிக்கை கடந்த 3 மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சந்தைய ஆய்வு நிறுவனமான எஸ் அண்டு பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தித் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த நவம்பர் மாதத்தில் 55.7ஆக இருந்தது. இது, முந்தைய அக்டோபர் மாதத்தில் 55.3ஆக இருந்தது. நவம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட பிஎம்ஐ, கடந்த 3 மாதங்களில் இல்லாத அதிகபட்ச புள்ளிகளாகும்.

இந்திய பொருள்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த நவம்பர் மாதத்தில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை பெருக்கின. வெளிநாடுகளிலிருந்து இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் அதிகரித்ததும் நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் உறுதியான வளர்ச்சியை அடைய வழிவகுத்தது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படும் என்ற வலுவான நம்பிக்கை ஏற்பட்டதால், அந்தத் துறையில் கடந்த நவம்பரில் அதிகம் பேர் பணியிலமர்த்தப்பட்டனர். அதன் மூலம், உற்பத்தித் துறையின் மூலம் வேலைவாய்ப்பு தொடர்ந்து 9-ஆவது மாதமாக உயர்வைக் கண்டுள்ளது. மேலும், உற்பத்தி செலவு அதிகம் உயராததால், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களுக்கான கையிருப்பை அதிகரித்தன.இந்தக் காரணங்களால், மாதா மாதம் கணக்கிடப்படும் உற்பத்தித் துறைக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த நவம்பர் மாதத்தில் 55.7-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love