December 9, 2022

நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்

நாமக்கல், நவ.1

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்டம், நரசிம்ம சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் முதுநிலை திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 2021-2022ம் ஆண்டில் சட்டப்பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து முதற்கட்டமாக, 10 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

2022-2023 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, திருக்கோயில்களில் பிரசாதம் வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், இவ்வாண்டு நாமக்கல், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி, ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆகிய திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இத்திட்டத்தினை அமைச்சர் சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் உட்பட மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி, ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி மூலமாக அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Spread the love