September 27, 2022

நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ்
துணிப்பைகள் மற்றும் குப்பைதொட்டிகள் ஆட்சியர் வழங்கினார்

விருதுநகர், செப்.3

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பி.புதுப்பட்டி கிராமத்தில் தூய்மைபாரத இயக்கம்(கி) திட்டத்தின்கீழ் நம்ம ஊரு சூப்பரு என்ற சுகாதார சிறப்பு பிரச்சாரத்தின் மூலம் துணிப்பைகள் மற்றும் குப்பைதொட்டிகள் வழங்கிமாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450 ஊராட்சிகளிலும் தூய்மைபாரத இயக்கம்(கி) திட்டத்தின் கீழ் தண்ணீர் சுகாதாரம் மற்றும் திட, திரவக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நம்ம ஊரு சூப்பரு என்ற சுகாதார சிறப்பு பிரச்சாரம் (20.08.2022 முதல் 01.10.2022 வரை) துவங்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பெருமளவு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பி.புதுப்பட்டி கிராமத்தில் ஊட்டசத்து மாத விழாவிற்கான ஊராட்சிகளில் ஊட்டசத்தை தூண்டுதல் என்ற தலைப்பை மையமாக வைத்து நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் நெகிழியை தவிர்த்து துணிப்பைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மஞ்சப்பைகளை வழங்கியும் திடக்கழிவு மேலாண்மை பின்பற்றும் விதமாக குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்குவதற்காக குப்பை தொட்டிகளையும்; பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்ட்-யினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Spread the love