September 27, 2022

நடுத்தர இந்தியர்கள் சேமிப்பில் தேக்கம் பாங்க்பஸார் நிறுவனம் ஆய்வு தகவல்

புது தில்லி, செப்.12

இந்தியர்களின் வாழ்வியல் விருப்பங்கள் அதிகரித்திருந்தாலும், செலவுகள் அதிகரித்திருப்பதால், கடன் வசதியை நாடுவது அதிகரித்திருப்பது மற்றும் சேமிப்பு தேக்கம் அடைந்திருப்பதும் பாங்க்பஸார் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இணைய நிதிச்சேவை நிறுவனமான பாங்க்பஸார் நிறுவனம், சுகாதாரம், செல்வ வளம், உறவுகள், தனிநபர் வளர்ச்சி ஆகிய பிரிவுகள் தொடர்பான இலக்குகள் சார்ந்த மக்களின் வாழ்வியல் விருப்பங்களை ஆய்வு செய்து, இதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. மாதச்சம்பளம் பெறுபவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிலான இந்த அட்டவணை தற்போது, 87.3 ஆக உள்ளது.

மேலும், இது வாழ்வியல் சார்ந்த விருப்பங்கள் அதிகரித்திருப்பதை உணர்த்துவதோடு, கோவிட் -19 பாதிப்பு அச்சத்தில் இருந்து மக்கள் மீண்டு வருவதை உணர்த்துவதாகவும் கருதப்படுகிறது. மக்களின் வாழ்வியல் விருப்பங்கள் அதிகரித்திருந்தாலும் செலவுகள் அதிகரித்திருப்பதால், பலரும் வாழ்வியல் தேவைக்காக கடன் வசதியை நாடுவதும் அதிகரித்திருப்பதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், செலவுகள் தாக்கம் காரணமாக சேமிப்பில் தேக்கம் அல்லது சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், கிரெடிட் கார்டு மூலம் மாதந்தோறும் கடன் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். பலரும், ஊதிய உயர்வு பெற்றிருந்தாலும், செலவுகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Spread the love