December 9, 2022

நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் வசூல்
31 சதம் அதிகரிப்பு: வருமான வரித்துறை தகவல்

புது தில்லி, நவ.14

நடப்பு நிதியாண்டில், இதுவரை மொத்த நேரடி வரி வருவாய் வசூல் 31 சதம் அதிகரித்து, ரூ.10.54 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து, வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாவது:

கார்ப்பரேட் மற்றும் தனிநபருக்கான நேரடி வரி வசூல், நடப்பு நிதியாண்டில் 31 சதம் அதிகரித்து, ரூ.10.54 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, தனிநபர் வருமான வரி வசூல் 41 சதமும்; கார்ப்பரேட் வரி வசூல் 22 சதமும் அதிகரித்துள்ளது.

மேலும், ஏப்ரல் 1 முதல், நவம்பர் 10 வரையிலான காலத்தில், ரீபண்டு வழங்கியது போக, நேரடி வரி வருவாய் ரூ.8.71 லட்சம் கோடியாக உள்ளது. இது, முழு ஆண்டுக்கான பட்ஜெட் வரி வசூல் இலக்கில் 61.31 சதமாகும். நடப்பு நிதியாண்டில், பட்ஜெட்டில் நேரடி வரி வசூல் இலக்கு ரூ.14.20 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.14.10 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

Spread the love