புது தில்லி, ஜன.19
நாட்டின் வணிகம் குறித்த நம்பிக்கை, கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 120 நிறுவனங்களில் வணிக நம்பிக்கை குறித்து, சிஐஐ ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், வணிக நம்பிக்கை குறியீடானது 67.2 ஆக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 62.2 ஆக இருந்தது.
இந்த ஆய்வில், 86 சதத்தினர், அரசாங்கம் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவது, இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சாதகமாக அமையும் என்று தெரிவித்துள்ளனர். அத்துடன், வரி வசூலில் உள்ள முன்னேற்றம் மற்றும் அதிகரித்துள்ள நுகர்வு ஆகியவையும், சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 70 சதத்தினர், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 6.5 – 7.5 சதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், வளர்ச்சியை தக்க வைக்க, ஆர்பிஐ, மேலும் வட்டியை உயர்த்தாமல் இருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதிக வட்டி விகிதங்கள், தனியார் முதலீடுகளை பாதிப்பதாக அமைந்துள்ளது என்றும், உலக பொருளாதார சூழலால், நடப்பு ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.