November 29, 2022

நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் மஹிந்திரா நிகரலாபம் 44 சதம் அதிகரிப்பு

மும்பை, நவ.21

நாட்டின் முன்னணி வாகன மற்றும் டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த செப்டம்பர் காலாண்டில் 44 சதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் ரூ.2,773 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,929 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 44 சதம் உயர்ந்துள்ளது.

மேலும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.29,870 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதங்களில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.21,470 கோடியாக இருந்தது. செப்டம்பர் காலாண்டில், வாகனப் பிரிவு செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.8,245 கோடியிலிருந்து ரூ.15,231 கோடியாகவும், பண்ணைக் கருவிகள் பிரிவின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.6,723 கோடியிலிருந்து ரூ.7,506 கோடியாகவும் அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love