புது தில்லி, ஜன.13
தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க நடப்பாண்டு 10 லட்சம் டன் துவரம் பருப்பை தனியார் வர்த்தகர்கள் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வெங்காயம், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய நுகர்வோர் விவகார செயலர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், வெப்பநிலை பாதிப்பு மற்றும் கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் வாடல் நோய் பாதிப்பால் நடப்பாண்டு துவரம் பருப்பு உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. தடுப்பாடு ஏற்படுவதைப் போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடப்பாண்டு சுமார் 10 லட்சம் டன் துவரம் பருப்பை தனியார் வர்த்தகர்கள் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2021-22ல் சுமார் 7.6 லட்சம் டன் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 2 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெரும்பகுதியும் மியான்மரில் இருந்தும் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் 12 லட்சம் டன் துவரம் பருப்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக இறக்குமதி விதிமுறைகளை எளிதாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை தற்போது நிலையாக உள்ளது. ராபி பருவ காலத்தில் வெங்காயம் கொள்முதல் செய்யப்படும் என்றார். இந்தியாவில் 2022-23 பயிர் பருவ ஆண்டில் (ஜூலை-ஜூன்) 3.89 மில்லியன் டன் துவரம் பருப்பு உற்பத்தியானது. அதற்கு முந்தைய ஆண்டு 4.43 மில்லியன் டன்னாக இருந்தது.