February 3, 2023

நடப்பாண்டு தமிழகம், புதுச்சேரியில்
42 சதம் வருமான வரி வசூல்

கோவை, டிச.6

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரி வசூல் இலக்கில் 42 சதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, இரு மாநில வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

வருமானவரி வசூலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சிறந்து விளங்குகிறது. மேலும், இந்த ஆண்டு ரூ.1.8 லட்சம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 42 சதம் வரி வசூல் பணி நிறைவடைந்துள்ளது. வரி வசூலில் கோவை மண்டலம் மட்டும் 28 சத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும், வருமானவரித் துறையில் முன்பு ரீ பண்ட் தான் முக்கிய பிரச்சினையாக வரி செலுத்துவோர் மத்தியில் காணப்பட்டது. தற்போது இந்நிலை மாறியுள்ளது. கோவை மண்டலத்தில் மட்டும் கடந்த முறை ரூ.700 கோடி ரீபண்ட் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை ரூ.1,800 கோடி, அதாவது 140 சதம் கூடுதலாக ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் இடையே நல்லுறவு மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருமானவரி படிவம் தாக்கல் செய்வதில் தொடங்கி விசாரணை வரை அனைத்திலும் ஆன்லைன் முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love