December 8, 2022

நடப்பாண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் வீடு வாங்குவது 20 சதம் அதிகரிப்பு

புது தில்லி, நவ.7

நடப்பாண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் வீடு வாங்குவது 20 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே இந்தியாவில் வீடு வாங்குவது குறித்து சிஐஐ-அனாராக் கருத்துக்கேட்பு நடத்தியது. மொத்தம் 5,500 வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், அவர்களில் 60 சதம் பேர் ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் வீடு வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 22 சதத்தினர் ஹைதராபாத்தை தங்கள் முதன்மைத் தேர்வாக குறிப்பிட்டுள்ளனர். 20 சதத்தினர் டெல்லியையும், 18 சதத்தினர் பெங்களூருவையும் தங்கள் தேர்வாக குறிப்பிட்டுள்ளனர்.

இது 2022ம் ஆண்டு முதல் 6 மாதங்களுக்கான அறிக்கை ஆகும். 2021-ம் ஆண்டு இதே காலகட்டத்துக்கான அறிக்கையில் பெங்களூரு, புனே, சென்னை ஆகிய நகரங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதன்மைத் தேர்வாக இருந்தது.

தில்லியில் காற்று மாசுபாடு தீவிரமாக உள்ளபோதிலும், பெங்களூரில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாதபோதிலும் அந்நகரங்களின் நவீனத் தன்மையால் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அங்கு வீடு வாங்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் வீடு வாங்குவது 20 சதம் அதிகரித்து இருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Spread the love