September 27, 2022

நடப்பாண்டில் பட்டாசு விலை 30 சதம் அதிகரிப்பு

சிவகாசி, செப்.9

நடப்பாண்டில் பட்டாசு விலை 30 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) தலைவர் கணேசன் தெரிவித்துள்ளதாவது:

சிவகாசி சுற்றுப்பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. நாட்டின் விற்பனையாகும் 95 சதவீத பட்டாசுகள் சிவகாசி பகுதியில் தான் தயாரிக்கப்படுகின்றன. கடும் கட்டுப்பாடுகளால் 70 சத தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது. மேலும், பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளால் பட்டாசு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டாசு தயாரிக்க மூலப் பொருட்கள் 25 முதல் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பட்டாசு விலையும் 25 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. 70 சதவீதம் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா முழுவதுமே பசுமை பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தில்லியில் 2023 ஜன. 1 வரை பட்டாசு உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய, வெடிக்க தடை விதித்து அரசு அறிவித்துள்ளது. இதனால் ரூ. 200 கோடி வரை வர்த்தகம் பாதித்துள்ளது. முன்பு கொரோனா தொற்றினால் சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மத்திய, மாநில அரசுகள் பசுமை பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது. பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

Spread the love