December 9, 2022

நடப்பாண்டில்நாட்டின் பொருளாதாரம் 7 சதம் மட்டுமே வளர்ச்சி காணும்: மூடிஸ் தகவல்

புது தில்லி, நவ.14

நாட்டின் பொருளாதாரம் நடப்பாண்டில் 7 சதம் மட்டுமே வளர்ச்சி காணும் என மூடிஸ் மதிப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2022ம் ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கணிப்பு 7.7 சதத்தில் இருந்து 7 சதமாகக் குறைக்கப்படுகிறது. உள்நாட்டில் நிலவும் அதீத பணவீக்கம், வட்டி விகிதங்கள் உயர்வு, சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை உள்ளிட்டவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளன.

கடந்த 2021ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.5 சதம் வளர்ச்சி கண்டது. 2023ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 4.8 சதமாகவும், 2024ம் ஆண்டில் 6.4 சதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் ஆர்பிஐ வட்டி விகிதங்களை மேலும் 0.5 சதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சி கண்டு வருகிறது. அரசின் மூலதன செலவினம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்சுடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி குறைந்துள்ளது. எனினும், ஏற்றுமதி சுமார் 30 சதம் அதிகமாக உள்ளது. தனியார் துறையின் முதலீடும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் உற்பத்திசார் ஊக்கத்தொகைத் திட்டம் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் 8.8 சதம் வளர்ச்சி காணும் என மூடிஸ் நிறுவனம் கடந்த மே மாதத்தில் கணித்திருந்தது. தற்போது அந்த கணிப்பை 7 சதமாகக் குறைத்துள்ளது.

Spread the love