September 27, 2022

தொழில்துறையினரிடம் ஆலோசித்த பிறகே
சந்தை ஆதாய வரி: நிதியமைச்சர் தகவல்

புது தில்லி, செப்.6

கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீதான சந்தை ஆதாய வரியை தொழில்துறையினரிடம் ஆலோசித்த பிறகே மத்திய அரசு விதித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனியார் நிறுவனம் சார்பில் இணையவழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் இது குறித்து தெரிவிக்கையில், சந்தை ஆதாய வரியை மத்திய அரசு தன்னிச்சையாக விதித்து வருவதாகக் கூறப்படும் கருத்து ஏற்புடையது அல்ல. சந்தை ஆதாய வரி விகிதங்களும் அவற்றை மாற்றியமைப்பதும் தொழில் துறையினருடன் ஆலோசித்த பிறகே மேற்கொள்ளப்படுகிறது. தொழில்துறையினரின் நம்பிக்கையைப் பெற்றபிறகே சந்தை ஆதாய வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இரு வாரங்களுக்கு ஒருமுறை வரி விகிதம் மாற்றியமைக்கப்படும் எனத்தொழில் துறையினருக்கு உறுதியளிக்கப்பட்டது. அதன்படி மாற்றியமைக்கப்பட்டும் வருகிறது.

மேலும், வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை விரிவான ஆய்வுக்குப் பிறகே மேற்கொள்ள முடியும். வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மேலும் பலரை வரி விகித வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வுக்குப் பிறகே முடிவெடுக்கப்படும்.

சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும்போது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறியிருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்துத் துறைகளிலும் எண்மமயத்தைப் புகுத்துவது அவசியம். கல்வித் துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு பல்வேறு துறைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதும் அவசியம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

Spread the love