September 26, 2022

தேர்தல் பத்திரங்கள் ரூ. 9,200 கோடிக்கு விற்பனை
மக்களவையில் மத்திய அரசு தகவல்

புது தில்லி, பிப்.9

கடந்த 2018ல் மத்திய அரசால் வெளியிடப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ரூ.9,208.24 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து மக்களவையில் மத்திய பெருநிறுவன விவகார இணையமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளதாவது:

எஸ்பிஐயிடம் இருந்து இதுவரையில் ரூ.9,208.24 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. கம்பெனி சட்டத்தின்படி, அரசு நிறுவனங்களைத் தவிர மூன்று ஆண்டுகளுக்கு கீழ் உள்ள நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவோ அல்லது வேறு வழியிலோ நிறுவனத்தின் இயக்குநர்களின் ஒப்புதல் பெற்று தேர்தல் பத்திரங்களை வாங்கி வழங்கலாம்.

மேலும், தேர்தல் பத்திரங்களை வாங்கும் நிறுவனங்களின் ஆண்டு லாபம், நஷ்டம் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும். எனினும், எந்தக் கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது என்ற தகவலை வெளிப்படுத்த தேவையில்லை. ஆகையால், அரசியல் கட்சிகளின் விவரங்கள் சேகரிப்படுவதில்லை. இந்தியாவைச் சேர்ந்த எவரும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தனி நபராகவும், பலருடன் கூட்டுச் சேர்ந்தும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். வெளிநாட்டவர்களுக்கு இந்தத் தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படுவதில்லை என்று பதிலளித்துள்ளார்.

2020-21ஆம் ஆண்டில் ரூ.324 கோடிக்கான தேர்தல் பத்திரங்களை பல்வேறு அரசியல் கட்சிகள் பணமாக்கல் செய்துள்ளன என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 2020-21ல் 14வது, 15வது கட்ட தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டு பணமாக மாற்றப்பட்டுள்ளன. இதுபோன்று 19வது கட்ட தேர்தல் பத்திரங்களில் ரூ.1,212.86 கோடிக்கு பணமாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Spread the love