October 4, 2022

தேஜஸ் 2.0 போர் விமானம் தயாரிக்க
மத்திய அரசு அனுமதி வழங்கியது

புது தில்லி, செப்.2

தேஜஸ் 2.0 போர் விமான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தேஜஸ் 2.0 போர் விமான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. திட்டத்துக்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் தேஜஸ் எம்.கே.1 ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. மொத்தம் 123 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க விமானப்படை ஒப்பந்தம் வழங்கி உள்ளது. இதில் 30 விமானங்கள், விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக தேஜஸ் 2.0 திட்டத்தை செயல்படுத்த மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் தேஜஸ் மார்க் 2 மாதிரி விமானம் தயாராகி விடும் என்றும் வரும் 2030-ல் உற்பத்தி தொடங்கும் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ள தேஜஸ் மார்க் 1 ரக விமானம் 3 டன் எடை கொண்டதாகும். தேஜஸ் மார்க் 2 விமானம் 4 டன் எடை கொண்டதாக இருக்கும். இதில் அதிநவீன ஆயுதங்கள், ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன.

Spread the love