September 27, 2022

தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர், செப்.9

விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கியும் குடற்புழு நீக்கம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் ஆகியோருக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின் கீழ் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் நமது விருதுநகர் மாவட்டத்தில் 09.09.2022 வெள்ளிக்கிழமை அன்றும் மற்றும் 16.09.2022 வெள்ளிக்கிழமை அன்றும் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் மொத்தம் 595026 குழந்தைகளுக்கும் மற்றும் 133884 எண்ணிக்கையில் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் ஆக மொத்தம் 728910 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு சோர்வு மற்றும் சுகவீனம் படிப்பில் கவனமின்மை பசியின்மை இரத்தசோகை ஆகியவை ஏற்படும். எனவே குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.

மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு அக்காப்பகத்திலேயே அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும். 1 வயது முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் டி மாத்திரை அளவு வழங்கப்படும். 2 வயதிற்கு மேற்பட்ட 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை அளவு வழங்கப்படும். சிறிய குழந்தைகளுக்கு மாத்திரையை நன்றாக பொடி செய்து தண்ணீருடன் கலந்து கொடுக்கப்படும். குழந்தைகள் நோய் வாய்ப்பட்டிருந்தால் மாத்திரை வழங்கப்படாது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.

Spread the love