November 29, 2022

தீபாவளி சிறப்பு பேருந்துகளால் ரூ.20 கோடி வருவாய்

சென்னை, அக்.28

தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் சென்றோரால், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: தீபாவளி பண்டிகைக்காக, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 10 ஆயிரத்து 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன் வாயிலாக, ஐந்து லட்சத்து 64 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அவர்களால் போக்குவரத்துக் கழகங்களுக்கு, ரூ.9.54 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. அதேபோல், தீபாவளியை கொண்டாடி விட்டு, தொழில் நகரங்களுக்குத் திரும்பும் வகையில், 24 முதல் 26ம் தேதி வரை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றின் வாயிலாக, 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. அந்த வகையில் தீபாவளிக்காக, தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட அரசு பஸ்களின் வாயிலாக 20 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துஉள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும், தமிழகத்தில் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை, 4,600 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு, ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் பயணித்தனர். கடந்த, 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை இயக்கப்பட்ட, 4,443 ஆம்னி பஸ்களின் வாயிலாக, ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். மொத்தம் மூன்று லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து உள்ளனர்.

Spread the love